Home » DISTRICT PRESS NEWS » கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

கடலூர் மஞ்சக்குப்பம் சில்வர் கடற்கரை சாலையோரத்தில் ஓட்டல் மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திடீர் சோதனை
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் எம்.பி.ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நந்தகுமார், நல்லத்தம்பி, ரவிச்சந்திரன் ஆகியோர் கடலூர் சில்வர் கடற்கரை சாலையோரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஓட்டலில் உணவுகள் சுகாதாரமான நிலையில் இருக்கிறதா?, தரமாக தயாரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது தயார் செய்த உணவுகள் பாலித்தீன் பையில் இருப்பதை பார்த்து அதை அகற்றும்படி ஓட்டல் உரிமையாளரிடம் தெரிவித்தனர். மேலும் குடிநீர் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாத்திரங்களை பிளீச்சிங் பவுடரை கொண்டு கழுவி சுத்தம் செய்த பின்னரே அவற்றில் தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுரை கூறினார்கள்.
குளிர்பான கடை
பின்னர் அங்குள்ள தானியங்கி இயந்திர குளிர்பான கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைக்கு உரிமம் பெறப்படவில்லை என்பது தெரியவந்தது. உரிமம் பெற உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் இல்லை என்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் குளிர்பானம் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை அறிய அதன் மாதிரியை சேகரித்துக்கொண்டனர்.
பின்னர் இது குறித்து டாக்டர் எம்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டப்பூர்வ நடவடிக்கை
கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள ஓட்டல், கடைகள் இருப்பதால் அங்கு தினமும் ஏராளமான மாணவர்கள் வந்து செல்கிறார்கள்.
இதனால் ஓட்டல் நல்ல சுகாதாரமான நிலையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வந்தோம். ஓட்டல் களில் சில குறைபாடுகள் இருப்பதை பார்த்து அவற்றைசரி செய்ய அறிவுரை வழங்கி இருக்கிறோம்.
ஓட்டல்களில் பலவண்ண பொடிகள் மற்றும் திரவங்களை பயன்படுத்தி உணவுபொருட்களை தயார் செய்ய கூடாது. சாப்பிட்ட இலைகளை மூடி உள்ள கூடைகளில் சேகரித்து வைத்து அப்புறப்படுத்த வேண்டும். ஈ மொய்க்கும் வகையில் உணவு பொருட்களை திறந்து வைக்க கூடாது. ஈகொல்லி இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம்.
அதேபோல குளிர்பானம் மற்றும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கூடாது என வியாபாரிகளை எச்சரித்துள்ளோம். எச்சரிக்கையை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு நோட்டீசு வழங்கி சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment