Home » DISTRICT PRESS NEWS » அழுகிப் போன ரூ. 6 கோடி ஆஸி. பட்டாணி.. அதிகாரிகள் பறிமுதல்- குடோனுக்கு சீல்

அழுகிப் போன ரூ. 6 கோடி ஆஸி. பட்டாணி.. அதிகாரிகள் பறிமுதல்- குடோனுக்கு சீல்

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ரூ.6கோடி மதிப்பிலான அழுகிய பட்டாணிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குடோனுக்கு சீல் வைத்தனர். தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையிலுள்ள ஒரு குடோனில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் பாதிப்பிற்குள்ளான மக்கள் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ்சந்திரபோஸ் தலைமையிலான குழுவினர் சம்மந்தப்பட்ட குடோனில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அங்கு இருந்த 3500டன் பட்டாணியில் சுமார் 2500டன் பட்டாணி அழுகியிருந்தது தெரியவந்தது. மேலும், விற்பனைக்காக மூடைகளில் அடைத்து வைத்திருந்த ஆயிரம் டன் பட்டாணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த பட்டாணிகள் சாப்பிட உகந்ததா என்பதை கண்டறிய அவற்றினை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச்சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் பட்டாணி இருந்த குடோனை சீல் வைத்தனர். ஆய்வின் முடிவினை தொடர்ந்தே இந்த பட்டாணியை பயன்படுத்தலாமா என்பது தெரியவரும், பயன்படுத்த முடியாது என்பது தெரியவந்தால் பட்டாணிகள் அனைத்தும் அழிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியான இந்த பட்டாணியின் மதிப்பு 6 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது

Leave a comment