Home » DISTRICT PRESS NEWS » எச்சரிக்கை: அதிகப்படியான ரசாயன உப்பால் மேகியை தொடர்ந்து மேலும் 11 நூடுல்ஸ் தயாரிப்புகளுக்கு தடை

எச்சரிக்கை: அதிகப்படியான ரசாயன உப்பால் மேகியை தொடர்ந்து மேலும் 11 நூடுல்ஸ் தயாரிப்புகளுக்கு தடை

பாட்னா, ஆக. 2-
மேகி சர்ச்சை ஏற்படுத்திய பீதி அடங்குவதற்குள், மேகியைப் போலவே ரசாயன உப்பு அதிகமாக இருப்பதாக பல முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸ் பொருட்களுக்கு பீகாரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பீகார் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் கிஷோர் கூறுகையில், “கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி பீகார் மாநிலத்தில் மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்டது. மேகி சர்ச்சையை அடுத்து, ஐடிசி நிறுவனத்தின் தயாரிப்பான ‘சன்பீஸ்ட் யிப்பீ நூடுல்ஸ்’, ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் ‘நாட் மஸ்ட் மசாலா நூடுல்ஸ்’, க்ளாக்ஸோ ஸ்மித் க்ளைன் நிறுவனத்தின்  ‘பூடுல்ஸ் மல்டிகிரைன், ஆட்டா மசாலா நூடுல்ஸ், இந்தோநிசின் நிறுவனத்தின் தயாரிப்பான ‘டாப் ராமன் சூப்பர் நூடுல்ஸ்’, கர்ரி வெஜ் நூடுல்ஸ், கப் நூடுல்ஸ், என்று மொத்தம் 11 நூடுல்ஸ் தயாரிப்புகள் டெல்லியில் சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையின் போது இதில் சர்ச்சைக்குரிய மோனோ சோடியம் குளூடமேட் இருப்பது தெரிய வந்தது. எனவே, இந்த அனைத்து நூடுல்ஸ் பொருட்களுக்கும் இன்று முதல் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.” என்றார்.
மேலும் இந்த பொருட்களின் விற்பனைக்கு மட்டுமின்றி விளம்பரங்கள் செய்வது, பிரபலப்படுத்துவது, கிடங்குகளில் சேமித்து வைப்பது என அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment