Home » DISTRICT PRESS NEWS » காலாவதி பொருட்கள் தாராளம் விழிப்புணர்வு இல்லாததால் கிராமங்களில் விற்பனை; அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததால் விபரீதம்

காலாவதி பொருட்கள் தாராளம் விழிப்புணர்வு இல்லாததால் கிராமங்களில் விற்பனை; அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததால் விபரீதம்

நரிக்குடி :

காலாவதியான மற்றும் தரமற்ற உணவுப் பொருள், குளிர் பானங்கள் விற்பனை, கிராமங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இதை சாப்பிடும் மக்கள், பல்வேறு விதமாக அவதிப்படுகின்றனர்.அதிகாரிகளின் முறையான ஆய்வு இல்லாததால், இது போன்ற பொருட்கள், இங்கு தாராளமாக கிடைக்கிறது.

மாவட்டத்தில், நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள கடைகளில், குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகள் விரும்பும் பிஸ்கட் முதல் வீட்டுத் தேவைக்கு வாங்கப்படும் மசாலா வரை,பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது.உணவுப் பொருட்களில் பெரும்பாலானாவை, காலாவதியானவையாக உள்ளன. இப்பொருட்களை வாங்கும் மக்கள், அப்பொருளை பயன்படுத்தலாமா, காலாவதியாகிவிட்டதா என, சோதனை செய்வதில்லை. புதிய பொருள் வந்தாலும், கடை உரிமையாளர்கள் , விற்பனையாகாமல் உள்ள, காலாவதி பொருளையே முதலில் விற்பனை செய்கின்றனர்.கோடை வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில், மக்கள், குளிர்பானங்களை அதிகளவில் விரும்புகின்றனர். ஆனால் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில், தேதி முடிந்த காலாவதியான குளிர்பானங்களையே, விற்பனை செய்கின்றனர். இதை வாங்கும் மக்கள், தேதியை பார்க்காமல் பருகுகின்றனர். ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்ட பின்னர், மருத்துவமனையை தேடி ஓடுகின்றனர். எந்த ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும், குறிப்பிட்ட காலம் மட்டுமே பயன்படுத்த முடியும். காலம் முடிந்த பின்னர் பயன்படுத்தப்படும் இப்பொருள், விஷமாக மாறி உயிரிழப்பினை ஏற்படுத்துகிறது. இது தவிர, கிராமப் பகுதிகளில், கோடை என்பதால், பல்வேறு தனி நபர்கள், புதிது புதிதாக பெயர் வைத்து, முறையான அனுமதி இல்லாமல், குளிர்பான கம்பெனிகளை ஆரம்பிக்கின்றனர். இதன் மூலப் பொருள், குறைவான விலையில், தரமற்றதாக உள்ளது.இதை தயாரிக்கும் நபர்கள், கடைகளில் குறைந்த விலைக்கு கொடுக்கின்றனர். கடை உரிமையாளருக்கு, இதில் இரு மடங்கு லாபம் கிடைப்பதால் விரும்பி வாங்குகின்றனர். மக்களும் குறைந்த விலையில் கிடைப்பதால், கெடுதல் பற்றி அறியாது பருகுகின்றனர் .கிராமத்து கடைகளில், குறிப்பிட்ட வகை குளிர்பானம் வேண்டும் என, மக்கள் கேட்பது குறைவு. பொதுவாக “கூல்டிரிங்ஸ்’ கொடுங்கள் என கேட்பர். கடை உரிமையாளர்களோ, தரமற்ற குளிர்பானங்களையே விற்பனை செய்கின்றனர். இது போல், முறையான அனுமதி பெறாமல் பலர் “மினரல் வாட்டர் பிளாண்ட்’ வைத்துள்ளனர். கோடை வெயிலை சமாளிக்க, கிராமம் மற்றும் நகர் பகுதியில், “சீப் அண்ட் பெஸ்ட்’ என, வாட்டர் பாக்கெட் வாங்கி குடிக்கின்றனர். இந்த பாக்கெட்டில், தயாரிப்பு தேதி இருப்பதில்லை. சாதாரண தண்ணீரையே பாக்கெட்டில் அடைத்து, “மினரல் வாட்டர்’ என, விற்பனை செய்கின்றனர். இதை, அதிகாரிகள் ஆய்வு செய்யாததால், இந்த முறைகேடு தொடர்கிறது.பொருட்களில் காலவாதி தேதி முடிந்து விட்டால், அந்த பொருளை அழித்துவிட, கடை உரிமையாளர்கள் முன் வருவதில்லை. அவ்வாறு செய்தால், நஷ்டம் ஏற்படும் என்பதால், வியாபாரிகள் பொருளினை அழிக்காமல், மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளோ, சம்பிரதாயத்திற்காக ஆய்வு நடத்திவிட்டு, கடமையை முடித்து கொள்கின்றனர். இதை முறைப்படுத்தினாலே, காலாவதிபொருட்களால், மக்களை பாதுகாக்க முடியும். புல்வாய்க்கரை செந்தில்குமார், “”கடைகளில் விற்கப்படும் தரமற்ற பொருட்கள் மற்றும் காலவாதியான பொருட்களால், மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பெரிய கொடுமையாக, குழந்தைகள் விரும்பும் பிஸ்கெட், ஜூஸ்களை, காலம் முடிந்த பின்னரும், சில கடைக்காரர்கள் விற்பனை செய்கின்றனர். குழந்தைகளை எந்த அளவிற்கு பாதிக்கும் எனத் தெரிந்தும், அந்தத் தவறினை செய்கின்றனர்,”என்றார்.உளுத்திமடை முத்துப்பாண்டி,”” கிராமப் பகுதிகளில், மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், காலாவதியான பொட்களை சாப்பிடக் கூடாது என தெரியாமல், உள்ளனர். தரமற்ற குளிர்பானம் உள்ளிட்ட பொருட்களை, விலைவு குறைவு என்பதால், வாங்குகின்றனர். சிறுவர்கள் விரும்பும் “ரஸ்னா’ எனப்படும் குளிர்பானம், சுகாதாரமற்ற முறையில் தயாரித்து, விற்பனை செய்கின்றனர். இதை அதிகாரிகள், முறையாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.
முதலில் எச்சரிக்கை பின்னர் அபராதம் : நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் குமாரசாமி,”” காலாவதியான மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றனரா என, அவ்வப்போது ஆய்வு செய்கிறோம். கண்டறியப்படும் பட்சத்தில், முதல் முறை எனில் விற்பனையாளரை எச்சரித்து , பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கிறோம். மீண்டும் அதே தவறை செய்தால், அபராதம் விதிக்கப்படுகிறது,”என்றார்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s