Home » DISTRICT PRESS NEWS » தண்ணீர்….. தண்ணீர்….. கேன் தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பொதுமக்கள் அவதி தண்ணீர் சுத்திகரிக்கும் கருவிகள் விற்பனை அதிகரிப்பு – DAILYTHANTHI PRESS NEWS

தண்ணீர்….. தண்ணீர்….. கேன் தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பொதுமக்கள் அவதி தண்ணீர் சுத்திகரிக்கும் கருவிகள் விற்பனை அதிகரிப்பு – DAILYTHANTHI PRESS NEWS

பதிவு செய்த நாள் : May 18 | 07:41 pm

சென்னை

கேன் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் பொதுமக்கள், மாற்று ஏற்பாடாக வீடுகளிலேயே தண்ணீர் சுத்திகரிக்கும் கருவிகளை வாங்க தொடங்கியதால், இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

கேன் தண்ணீர் பயன்பாடு

சென்னையை பொறுத்தமட்டில் இளம் வட்டத்தினர் காதில் செல்போனுடன் இணைக்கப்பட்ட ஹெட்போனுடனும், கையில் கேன் தண்ணீர் பாட்டிலுடன் (மினரல் வாட்டர் கேன்) சுற்றி திரிவதை தான் அதிகம் காணமுடிகிறது.

அதேபோல் வீடுகளுக்கும் மாதம் தோறும் கியாஸ் சிலிண்டர், மின்சார கட்டணம், கேபிள் டி.வி., பால், மளிகை, அரிசி போன்றவற்றின் வரிசையில் தற்போது இணைந்திருப்பது கேன் தண்ணீர் கட்டணம். காரணம் மனிதனுக்கு வரும் நோய்களில் 75 சதவீதம் நோய்கள் குடிதண்ணீரால் வருகிறது என்று மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, பொதுமக்கள் தங்கள் வீட்டு தேவைக்கு கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் முறைக்கு ஆளாகி உள்ளனர்.

மாசுகட்டுப்பாட்டு வாரியம்

கேன் தண்ணீரை அதிகம் பேர் வாங்கி பயன்படுத்த தொடங்கியதால் அதில் ஒரு சில போலிகளும் நுழைந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், போலிகளை ஒழிப்பதற்காக, பசுமைத்தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தது.

இதில் அனுமதியில்லாமல் செயல்படும் கேன் தண்ணீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை இழுத்து மூட மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் அனுமதியில்லாமல் செயல்பட்ட 103 குடிநீர் நிறுவனங்களை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூடியுள்ளது. அத்துடன் இவற்றுக்கான மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு

இதனை கண்டித்து தற்போது சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செயல்பட்டு வந்த 300 கேன் தண்ணீர் தயாரிப்பாளர்கள், தண்ணீர் சுத்திகரிப்பையும், விற்பனையையும் நிறுத்தி உள்ளனர்.

இதனால் கேன் தண்ணீர் பொதுமக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. கேன் தண்ணீர் குடித்து பழக்கப்பட்டு போன சென்னைவாசிகள் தற்போது பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சுத்திகரிக்கும் இயந்திரம்

இதுகுறித்து தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் தயாரிக்கும் அக்குவாகார்ட் போன்ற தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:–

கேன் தண்ணீர் விற்பனையில் தற்போது பிரச்சினை ஏற்பட்டதால் அக்குவாகார்ட் இயந்திரங்களை பலர் வாங்கி செல்வதால் விற்பனை அதிகரித்துள்ளது. மூன்று வகையில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

ரூ.13 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.23 ஆயிரம் ஆகிய விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் ரூ.23 ஆயிரம் மதிப்பில் வந்துள்ள கருவிகள் எல்.இ.டி. டி.வி. போன்று நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட மாடல் வகையை சேர்ந்ததாகும். வாடிக்கையாளர்கள் இந்த வகையை அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதுகுறித்து கேன் தண்ணீர் தயாரிப்பாளர் சங்கத்தினர் கூறியதாவது:–

வேலைநிறுத்தம்

குடிசை தொழிலாக செய்துவரும் கேன் தண்ணீர் தயாரிக்கும் தொழில் மூலம் சென்னையில் தினசரி 6 லட்சம் கேன் தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் அனைத்து கேன் தண்ணீர் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நியாயமான முடிவு கிடைக்கும் வரை தொடர்வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் மாநிலம் முழுவதும் கேன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதற்கு முன்பாக முதல்–அமைச்சரின் கவனத்திற்கு எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து கூற உள்ளோம்.

இவ்வாறு சங்க நிர்வாகிகள் கூறினர்.

மூலிகை குடிநீர்

இதுகுறித்து மூலிகை மருத்துவர்கள் கூறியதாவது:–

நம்முடைய முன்னோர்கள் இதுபோன்று கேன் தண்ணீரை குடிக்காமலே சராசரியாக 80 வயது வரை வாழ்ந்துள்ளனர். சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த சீரக குடிநீர், சீரகம், தனியா (கொத்தமல்லி) விதைகளை சேர்த்துக்கொதிக்க வைத்த தனியா சீரக குடிநீர், உலர்ந்த துளசி இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக்கொதிக்க வைத்த துளசி குடிநீர், உலர்ந்த வல்லாரை இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக்கொதிக்க வைத்த வல்லாரை குடிநீர். மாம்பட்டை, நெல்லிப்பட்டை, கரிஞ்ஞாலி வேர் இவற்றை நிழலில் உலர்த்திப்பொடித்து வைத்து தயாரிக்கப்பட்ட மூலிகை குடிநீர் மற்றும் நன்னாரி மற்றும் வெட்டி வேர்களை தண்ணீரில் போட்டு வீட்டிலேயே தயாரித்து குடித்து வந்தனர்.

இதனால் அவர்கள் நோய்நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர். இதேபோன்று மூலிகைகள் அனைத்தும் தற்போதும் கிடைப்பதால் கேன் தண்ணீருக்கு பதிலாக, நாம் அனைவரும் இதுபோன்று மூலிகை வேர்களை பயன்படுத்தி மூலிகை தண்ணீரை பயன்படுத்தலாம். ஆரோக்கியம் மேம்படுவதுடன், செலவும் மிச்சப்படும்.

இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s